மரத்தில் கார் மோதி வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்

ஆரணி அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-09-25 18:26 GMT
ஆரணி

ஆரணி அருகே மரத்தில் கார் மோதி வாலிபர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

மரத்தில் கார் மோதியது

புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன் மனோஜ்குமார் (வயது 14), 9&ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் அங்குள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தான். 

இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக மனோஜ்குமார் மற்றும் அவருடன் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ளும் காரைக்குடி பகுதியை சேர்ந்த சந்தோஷ், கிளியனூர் பகுதியை சேர்ந்த ஜஸ்வந்த், சென்னை பகுதியை சேர்ந்த லத்திக்சரண் ஆகியோர் காரில் பெங்களூருவுக்கு சென்றனர். புதுச்சேரி நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த டிரைவர் உதயகுமார் கார் ஓட்டினார். 

பின்னர் அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்ல திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக காரில் வந்தனர். 

நேற்று அதிகாலை ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் அரியப்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. 

வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்

இந்த விபத்தில் மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் சந்தோஷ், ஜஸ்வந்த், லத்திக்சரண் மற்றும் டிரைவர் உதயகுமார் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


தொடர்ந்து மனோஜ்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்