ஏ.டி.எம். மைய பணம் செலுத்தும் எந்திரத்தில் கள்ளநோட்டுகள்

கமுதியில் வங்கி ஏ.டி.எம். மைய பணம் செலுத்தும் எந்திரத்தில் பணநோட்டுகளுடன், கள்ளநோட்டுகளும் டெபாசிட் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-25 18:23 GMT
கமுதி.

கமுதியில் வங்கி ஏ.டி.எம். மைய பணம் செலுத்தும் எந்திரத்தில் பணநோட்டுகளுடன், கள்ளநோட்டுகளும் டெபாசிட் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளநோட்டுகள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கமுதி பஸ் நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் ஒருவர், அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள மற்றொருவரின் கணக்கில் ரூ.38 ஆயிரம் டெபாசிட் செய்துள்ளார். அதில் ரூ. 5 ஆயிரத்துக்கு கள்ளநோட்டுகள் இருந்ததை ஏ.டி.எம். பணம் செலுத்தும் எந்திரத்தை ஆய்வு செய்த வங்கி ஊழியர் கண்டறிந்தார்.
இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் நிதின், கமுதி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில், வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் அந்த பணத்தை டெபாசிட் செய்த நபர் முஸ்லிம் பஜார் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் என்பது தெரிய வந்தது. 

விசாரணை

 இதை குறித்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது அவரது தந்தை கொடுத்த பணத்தை டெபாசிட் செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து கமுதி போலீசார், அவரது தந்தையை கமுதி போலீஸ் நிலையத்து அழைத்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், தனது மரக்கடைக்கு பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளரிடம் இருந்து அந்த நோட்டுகளை பெற்றதாகவும், அது கள்ளநோட்டுகள் என்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்