அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பலி
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி சாப்ட்வேர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
குலசேகரம் அருகே உள்ள உண்ணீர்கோணம் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் மகன் ஜெனிஸ்ஜான் (வயது 35). இவர் திருவனந்தபுரத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்சி சர்மிளா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆன்சி சர்மிளா வள்ளியூர் கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உண்டு.
ஜெனிஸ்ஜான் தற்போது மனைவி, குழந்தையுடன் வில்லுக்குறி அருகே வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வந்தார். மேலும் குலசேகரம் பகுதியில் புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது.
ஸ்கூட்டரில் வந்தார்
ஜெனிஸ்ஜான் நேற்று புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு வேலையை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குலசேகரத்திற்கு சென்றார். மாலையில் வீடு திரும்பும் போது தனது மோட்டார் சைக்கிள் சாவி தொலைந்ததாக தெரிகிறது. இதனால், அவர் தனது நண்பரின் ஸ்கூட்டரை இரவல் வாங்கி வீட்டிற்கு புறப்பட்டார்.
தக்கலை அருகே அழகர் அம்மன்கோவில் எடைமேடை பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் ஸ்கூட்டர் நிலை தடுமாறி ஜெனிஸ்ஜான் கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தலை மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.