தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள செய்திகள் வருமாறு:-
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொடியலூர் கிராமத்தில் தென்பாதி பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் 80 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தற்போது இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதையில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே புதர் மண்டி கிடக்கும் தென்பாதி வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசன்னா, கொடியலூர்.
குண்டும், குழியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாடர்ன் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.
மாடர்ன் நகர், பொதுமக்கள் மன்னார்குடி
சேதமடைந்த பயணிகள் நிழலகம்
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகில் பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகம் கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. எந்நேரத்தில் இந்த கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் இங்கு நின்று பயணிகள் பஸ்சில் ஏறி செல்வதில்லை. இதேபோல நாகை & நாகூர் சாலையில் உள்ள அனைத்து பயணிகள் நிழலகம் சேதமடைந்த நிலையில் தான் காணப்படுகிறது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கே.எம். ஹபிபுல்லா, நாகப்பட்டினம்
ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையொட்டி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. குடிநீர் தொட்டியின் தூணில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான குடிநீர் தொட்டி அருகே பள்ளி அமைந்திருப்பதால் மாணவ&மாணவிகள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். எனவே உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புரட்சிமணி, வடவேர்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
சீர்காழி அருகே திருவாலி நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கிடங்கு உள்ளது. இதன் அருகே உள்ள மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் வாணிபக்கழக கிடங்குக்கு லாரிகளில் ஏற்றிவரப்படும் நெல் மூட்டைகளை தொழிலாளர் இறக்குவதற்காக லாரியில் ஏறும் போது அவர்கள் மீது மின்கம்பிகள் உரசும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம மக்கள், திருவாலி.
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் திருவீழிமிழலை ஊராட்சி முதல் கட்டளை கிராமம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள்,திருவீழிமிழலை.