திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் உள்பட 15 பேர் போட்டியின்றி தேர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர்கள் உள்பட 15 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

Update: 2021-09-25 17:13 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஊராட்சி தலைவர்கள், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 28 பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி நிறைவு பெற்றது. இந்த 28 பதவிகளுக்கும் மொத்தம் 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 
இதையடுத்து வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. அதில் 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 19 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 10 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 9 பேரும் வாபஸ் பெற்றனர். 
இதன்மூலம் 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஆண்டிப்பட்டி மற்றும் ஆவிளிபட்டி ஆகிய ஊராட்சிகளின் தலைவர்கள் என மொத்தமாக 15 பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே போட்டியில் உள்ளனர். இதனால் அவர்கள் 15 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஊராட்சி தலைவர்கள், 2 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 9-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 45 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. 

மேலும் செய்திகள்