சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 4 பேர் கைது
சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.
சிதம்பரம்,
சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சிதம்பரம் பூதகேணி பகுதியை சேர்ந்த அஜிஸ் (வயது 21), மின் நகர் பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா(21), எம்.கே. தோட்டம் பகுதியை சேர்ந்த சேரன் நீதி (20), அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (21) ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து சிதம்பரம் பைபாஸ் ரோட்டில் வரும் வாகனங்களை வழிமறித்து, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அஜிஸ் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.