தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
பாளையங்கோட்டை நியூகாலனி பெருமாள்புரம் கேரளா அகாடமி எதிரே உள்ள தெருவில் மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் மரக்கிளைகளும் காற்றில் மின் கம்பிகள் மீது உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இதுசம்பந்தமாக மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கோவிந்தராஜன், பெருமாள்புரம் நியூகாலனி.
சீரான குடிநீர் வினியோகம் வேண்டும்
நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி மகிழ்ச்சி நகர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் சரியான நேரத்தில் வருவதில்லை. ஒரு நாள் காலையிலும், மற்றொரு நாள் மதியமும், இன்னொரு நாள் மாலையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகையால் எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரசுப்பிரமணியன், மகிழ்ச்சி நகர்.
சாலை வசதி
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வின்சென்ட் நகரில் சுமார் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 3 தெருக்கள் உள்ளன. இதில் ஒரு தெருவில் மட்டுமே சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற 2 தெருக்களிலும் சாலை வசதி இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் சாலையில் தேங்கும் அவலம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சோனியா, கழுகுமலை.
பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுமா?
திருச்செந்தூர் கீழரதவீதி சாலையில் பெரும்பகுதி பிளாட்பாரத்தில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் அறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் பிளாட்பார சாலை மணலாக காட்சி அளிக்கிறது. இதில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் பள்ளம், மேடாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அங்குள்ள சன்னதி தெரு, கோட்டைக்கு செல்லும் சந்து எதிரில் உள்ள சாலையிலும் இதே நிலை தான் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பேவர் பிளாக் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
திருச்செந்தூர் தாலுகா பிலோமிநகர் பஞ்சாயத்து முத்துநகர் பகுதியில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதியில் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும விழும் என்ற நிலையில் இருப்பதால் அக்கம்பக்கத்தில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மின்வாரியத்துறையினர் இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
முத்துக்குமார், திருச்செந்தூர்.
நாய்கள் தொல்லை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் ரகுமானியாபுரம் மேற்கு பகுதியில் 7 வயது சிறுவனை நாய்கள் கடித்து குதறியது. இதேபோல் மேற்கு மலம்பாட்டை ரோட்டில் ஒரு சிறுவனை நாய்கள் துரத்திச் சென்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
சாகுல் அமீது, கடையநல்லூர்.