திண்டுக்கல்லில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
திண்டுக்கல்லில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில், திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில், திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தலை துண்டித்து பெண் கொலை
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன். திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் வசித்து வந்த அவர், கடந்த 2012&ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக, அந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய நந்தவனப்பட்டியை சேர்ந்த நிர்மலா (வயது 60), கடந்த 22&ந்தேதி செட்டியநாயக்கன்பட்டி இ.பி.காலனியில் தலை துண்டித்து கொல்லப்பட்டார். மேலும் அவருடைய தலையை பசுபதி பாண்டியனின் வீட்டு முன்பு கொலையாளிகள் வீசி சென்றனர்.
கோர்ட்டில் 5 பேர் சரண்
இதுதொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கொலையாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்ததாக செம்பட்டி அருகேயுள்ள பச்சைமலையான்கோட்டையை சேர்ந்த அய்யனார், உதவி செய்ததாக சீவல்சரகை சேர்ந்த பூபாலன், கரட்டழகன்பட்டியை சேர்ந்த நடராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்ட ரமேஷ்குமார், சங்கிலிகருப்பன், தமிழ்செல்வன், அலெக்ஸ்பாண்டி, முத்துமணி ஆகிய 5 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
காவலில் எடுக்க திட்டம்
இதற்கிடையே திருச்சி சிறையில் இருக்கும் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து இருக்கின்றனர். அதற்கு முதல்கட்டமாக இன்னும் ஒருசில நாட்களில் திருச்சி சிறையில் இருக்கும் 5 பேரையும், திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது கோர்ட்டில் மனு தாக்கல் செய்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தாடிக்கொம்பு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.