புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
புரட்டாசி 2-வது சனிக்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
இதைபின்பற்றும் வகையில் இந்த மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் புரட்டாசி திருவிழாவில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிறப்பு பூஜைகள்
பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தால், பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தவாறு சாமியை தரிசனம் செய்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற கணவாய்பட்டி வெங்கட்ரமண சாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோவில், பாலேகுளி அனுமந்தராய சாமி கோவில், கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் பெருமாள் சன்னதி, மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.