ஓசூரில் மதுபோதையில் பயங்கரம்: வடமாநில தொழிலாளி குத்திக்கொலை-நண்பர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூரில் மதுபோதையில், வடமாநில தொழிலாளியை அவருடைய நண்பர்கள் 2 பேர் குத்திக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
ஓசூர்:
ஓசூரில் மதுபோதையில், வடமாநில தொழிலாளியை அவருடைய நண்பர்கள் 2 பேர் குத்திக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
வடமாநில தொழிலாளி
அசாம் மாநிலம் தினிகோரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உமேசர் நொரா. இவருடைய மகன் ராஜன் நொரா (வயது 29). இவருக்கு இந்திரா நொரா என்ற மனைவியும், தேவிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ராஜன் நொரா, கடந்த சில ஆண்டுகளாக ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் குடும்பத்துடன் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள, தனது மாநிலத்தை சேர்ந்த கிஷன் மற்றும் அஜய் என்ற 2 நண்பர்களுடன் ராஜன் நொரா மது அருந்த சென்றார். இரவு 11 மணி வரை அவர்கள் மது அருந்தி உள்ளனர். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், உடனிருந்த நண்பர்கள் கத்தியால் ராஜன் நொராவின் தலை, கழுத்து, நெற்றி பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ராஜன் நொரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கடன் பிரச்சினையால் இந்த கொலை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் அங்கு சென்று ராஜன் நொராவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாகி விட்ட அவரது 2 நண்பர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.