நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் திருட்டு - போலீசார் தீவிர விசாரணை

நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-25 16:20 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரை பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜோயல் ஜேம்ஸ் (வயது 68). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். இந்த நிலையில் ஆபிரகாம் ஜோயல் ஜேம்ஸ் நேற்று ஆசாரிபள்ளம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் உள்ள ஒரு இரும்பு லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு லாக்கர் சாவி காணாமல் போனது. சாவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் எனது வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்தேன். இருப்பினும் சாவி கிடைக்கவில்லை.

இதையடுத்து லாக்கரை, நம்பர் லாக் மூலம் திறக்க முடிவு செய்தேன். ஆனால் நம்பர் லாக் செய்த ரகசிய எண் மறந்துவிட்டது. அந்த ரகசிய எண்ணை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தேன். அதை பார்த்து லாக்கரை நம்பர் லாக் மூலம் திறந்து பார்த்தேன். அப்போது அதில் இருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ரூ.3¼ லட்சம் பணம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி விட்டு, மீண்டும் லாக்கரை பூட்டி சென்றுள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருட்டுபோன பணம் மற்றும் நகைகளை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பதிவான ரேகைகளையும் பதிவு செய்தனர். தொடர்ந்து டாக்டரின் வீட்டிற்கு சமீபத்தில் யார்? யார்? எல்லாம் வந்தார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்