அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்த ஆண் காட்டு யானை ஒன்று, பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, அட்டகாசத்தில் ஈடுபட்டதால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்ததுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-25 15:19 GMT
கோத்தகிரி
கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்த ஆண் காட்டு யானை ஒன்று, பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, அட்டகாசத்தில் ஈடுபட்டதால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்ததுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ்சை வழிமறிந்த காட்டு யானை

கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. எனவே பலாப் பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன. இவ்வாறு வந்த யானைகள் குட்டிகளுடனும், தனியாகவும் அவ்வப்போது கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உலா வந்த வண்ணம் உள்ளன. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கோத்தகிரியில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது மேல் தட்டப்பள்ளம் அருகே ஆண் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது. காட்டு யானையைக் கண்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக நிறுத்தினார். 

கண்ணாடியை உடைத்தது

சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்த காட்டு யானை, திடீரென மிரண்டு பஸ்சை நோக்கி ஓடி வந்து, பஸ்சின் முன்புற கண்ணாடியை தனது தந்தத்தால் குத்தி உடைத்தது. அதுவரை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் உள்பட பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பஸ்சின் உள்புரம் பின்புற இருக்கைகள் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று நின்றுக் கொண்டனர். பின்னர் யானை பஸ்சை சிறிது நேரம் சுற்றி வந்தவாறு இருந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். சிறிது நேரத்திற்கு பின் ஆண் காட்டு யானை அங்கிருந்து சென்று அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டத்துடன் அந்த சாலையில் சற்று நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த காட்சியை பஸ்சில் பயணம் செய்த ஒரு சில பயணிகள் தங்களது மொபைல் போனில் வீடியோ படமெடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால், வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, யானைகள் சாலைக்கு வராதவாறு, தடுப்பு கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்