குறைதீர்க்கும் கூட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
6 ஏக்கர் நெல் அறுவடை செய்யாமலே மடிந்து போனதால் குறைதீர்க்கும் கூட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறை அதிகாரிகளும், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் ஒவ்வொரு விவசாயிகளாக தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டம் நடந்து கொண்டிருந்தநேரத்தில் தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுவுடன் அரங்கிற்குள் வந்தனர். திடீரென அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் மற்றும் அதிகாரிகள் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என அதிகாரிகள் கேட்டபோது, ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிக்காடு கிராமத்தில் விவசாயி திருவேங்கடம் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கரில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் அவரது வயலுக்கு செல்லும் பொது பாதையை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு திருவேங்கடத்தை வயலுக்கு விடாததால், நெல் அறுவடை செய்யாமல் மடிந்து, மக்கி போனது.
இதனால் திருவேங்கடத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுவரை தொடர்ந்து சாகுபடியையும் செய்ய முடியவில்லை. தாசில்தார் முதல் மாவட்ட கலெக்டர் வரை மனு கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதாக கூறும் இந்த கூட்டம் வெறும் கண்துடைப்பு தான், விவசாயிகளின் குறைதீர்க்கும் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர்.
இதை கேட்ட கலெக்டர், விவசாயிகளை அழைத்து, உங்களது கோரிக்கை தற்போது தான் எனது கவனத்துக்கு வருகிறது. உடனடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்த சொல்கிறேன் என்றார். ஆனாலும் விவசாயிகள் 20 நிமிடத்திற்கு மேல் கூட்டத்தை நடத்த விடாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேசிய கலெக்டர், தெளிவாக சொல்கிறேன். முதன்முறையாக இந்த மனுவை பார்க்கிறேன். நான் பொறுப்பு ஏற்பதற்கு முன்பாக மனு கொடுத்து இருக்கிறீர்கள். நான் உங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காணுவதை பற்றி பேசுவோமா அல்லது பிரச்சினையை பற்றி பேசுவோமா? என்று கூறினார். உடனடியாக கூட்டத்தில் இருந்த இதர விவசாயிகள் எழுந்து, பிரச்சினைக்கு தீர்வு செய்வதாக கலெக்டரே சொல்கிறார்.
இது தான் தீர்வாக இருக்க முடியும் என கூறி பொட்டலங்குடிக்காடு விவசாயிகளை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் மனுவை கலெக்டரிடம் கொடுத்து விட்டு கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் வேலுமணியை அழைத்த கலெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தும்படி உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் கூட்டம் இதர விவசாயிகளை கொண்டு நடைபெற்றது.