காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 82 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 82 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 14 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2021-09-25 11:23 GMT
காஞ்சீபுரம்,

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்திரவிட்டார். அதன் பேரில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் 210 ரவுடிகள் வீடுகளை சோதனை செய்ததில், 8 கத்திகள் மற்றும் ஒரு இரும்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டது. அவர்களில் 82 ரவுடிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 14 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 4 ரவுடிகளை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்