ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து கிணற்றில் குதித்தனர் - பெண் பலி; 3 பேருக்கு தீவிர சிகிச்சை

குடும்ப வறுமையால் மனவேதனை அடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து கிணற்றில் குதித்ததில் பெண் பலியானார். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-09-25 10:29 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த பாண்டூரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 45). இவரது மனைவி புவனேஸ்வரி (40). இவர்களுக்கு மோகனப்பிரியா (வயது 22), துர்கா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கருணாகரன் பாண்டூரில் ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், கொரோனா தொற்று காரணமாக 1 வருடத்துக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு கிடந்ததால் கருணாகரன் வேலை இல்லாமல் தவித்து வந்தார். இந்தநிலையில் மற்றொரு இடத்தில் தற்காலிகமாக டிரைவராக வேலை செய்து வந்த நிலையில், அவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலை செய்ய முடியாமல் தவித்து வந்த அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

இந்நிலையில் பெரிய மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை என்ற மனவேதனையிலும் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே அவர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, பாண்டூரில் அக்கம்பக்கத்தினரிடம் தங்களின் குடும்ப கஷ்டம் தீர திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்வதாக கூறி விட்டு ஆந்திர மாநிலம் எல்லையில் உள்ள நகரி அடுத்த விஜயபுரம் மண்டலம் நெடும்பரம் சோதனைச் சாவடி பகுதிக்கு நேற்றுமுன்தினம் வந்தனர்.

அங்குள்ள கிணற்றின் அருகே அமர்ந்த 4 பேரும் கையில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டனர். பின்னர், சிறிது நேரத்தில் வயிற்றில் எரிச்சல் ஆரம்பிக்கவே தாங்க முடியாமல் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டனர். இதையடுத்து அவர்களது அலறல் சத்தம் கேட்டு சோதனைச் சாவடி அருகில் பணியிலிருந்த ஊழியர்கள் ஓடி வந்தனர்.

உடனடியாக அவர்கள் கிணற்றில் குதித்து 4 பேரையும் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். கருணாகரன், மோகனப்பிரியா, துர்கா ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்