வாலிபர் கொலையில் கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது
பெங்களூரு அருகே வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு: பெங்களூரு அருகே வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
4 பேர் கைது
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூரு அருகே கோடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிரண் (வயது 26). இவர், பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாதவாரா பகுதியில் வசித்து வந்தார். கடந்த 7-ந் தேதி மாதவாரா அருகே மர்மநபர்கள் கிரணை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றனர். இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந் தேதி உயிர் இழந்திருந்தார்.
இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் கிரண் கொலை வழக்கில், அவரது கள்ளக்காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மாதவாராவை சேர்ந்த ஸ்வேதா (வயது 33) , பெங்களூரு எம்.எஸ்.பாளையாவை சேர்ந்த டேவிட் (31) , ஜாலஹள்ளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28), தினேஷ் (29) என்று தெரிந்தது. கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கள்ளத்தொடர்பு
ராமநகரை சேர்ந்த கிரண், வேலைக்காக மாதவாராவுக்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே சித்தராஜ் என்பவர் வசித்து வந்திருந்தார். சித்தராஜிடன், கிரணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு கிரண் அடிக்கடி சென்ற போது, சித்தராஜ் மனைவி ஸ்வேதாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையில், உடல் நலக்குறைவு காரணமாக சித்தராஜ் இறந்துவிட்டார்.
இதையடுத்து, பெங்களூரு சொக்கசந்திராவில் ஸ்வேதா, அவரது மகள்களுடன் கிரண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த சந்தாப்பத்தில் ஸ்வேதாவின் மூத்த மகளுக்கு கிரண் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மகனின் கள்ளத்தொடர்பு பற்றி அறிந்த கிரணின் தந்தை, தனது மகனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
வேறு ஒருவருடன் தொடர்பு
திருமணத்திற்கு பின்பும் ஸ்வேதாவுடன் கள்ளத்தொடர்பை கிரண் தொடர்ந்து வந்துள்ளார். ஆனால் கிரணின் குடும்பத்தினர் ஸ்வேதாவுக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அத்துடன் தனது மகளை திருமணம் செய்ய கிரண் திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த ஸ்வேதா, அவரை கொலை முடிவு செய்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் டேவிட்டுடன் ஸ்வேதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளத்தொடர்புக்கு கிரண் இடையூறாக இருப்பதாக டேவிட்டிடம் ஸ்வேதா கூறியுள்ளார். பின்னர் 2 பேரும் சேர்ந்து கிரணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கூலிப்படையை சேர்ந்த ஸ்ரீகாந்த், தினேசுக்கு ரூ.1 லட்சம் தருவதாக கூறிய ஸ்வேதா முன்பணமாக ரூ.10 ஆயிரத்தையும் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 7-ந் தேதி டேவிட் உள்பட 3 பேரும் சேர்ந்து கிரணை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. டேவிட் கடந்த 2019-ம் ஆண்டு 800 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கைதான 4 பேர்மீதும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.