மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். மனைவி கர்ப்பிணியாக உள்ளநிலையில் கணவர் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். மனைவி கர்ப்பிணியாக உள்ளநிலையில் கணவர் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பூவத்தூர் கருப்பன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் ராஜா (வயது27). இவர் உறந்தைராயன்குடிக்காடு பிரிவு தமிழ்நாடு மின்சார அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பூவத்தூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை ராஜா சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மனைவி கர்ப்பம்
இதுகுறித்து ராஜாவின் தந்தை பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ராஜாவின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த ராஜாவுக்கு கடந்த 10 மாதத்திற்கு முன்பு தான் திருமணமானது என்றும், தற்போது அவரது மனைவி பாண்டிச்செல்வி (25) 9 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மனைவி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.