வீட்டின் மேற்கூரை இடிந்து குழந்தை பலி: கல்குவாரியை மூட உதவி கலெக்டர் உத்தரவு

ராதாபுரம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து அங்குள்ள கல்குவாரியை மூடுவதற்கு உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.;

Update: 2021-09-24 20:20 GMT
ராதாபுரம்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 3), கடந்த 22-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்தான். அப்போது திடீரென்று வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

அங்குள்ள கல்குவாரியில் வெடி வைத்தபோது ஏற்பட்ட அதிர்வில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை ஆகாஷ் உயிரிழந்தான் என்று கூறி, குழந்தையின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தையை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி நேற்று சீலாத்திகுளத்துக்கு சென்று, இறந்த ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அங்குள்ள கல்குவாரிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கல்குவாரியை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டார். மேலும் கல்குவாரி உரிமையாளரை வருகிற 30-ந்தேதி சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து கல்குவாரி மூடப்பட்டது.

மேலும் செய்திகள்