மாஞ்சோலை சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
விதிமுறையை மீறிய மாஞ்சோலை சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
அம்பை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகள் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு தினமும் 5 வாகனங்கள் மட்டும் மாஞ்சோலை செல்ல வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். மாஞ்சோலை சுற்றுலா செல்லும் பயணிகள் காலை 6 மணிக்கு பின்னர் சென்று விட்டு மாலை 6 மணிக்குள் மணிமுத்தாறு வன சோதனைச்சாவடிக்கு திரும்பி வரவேண்டியது கட்டாயம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் மாஞ்சோலை சுற்றுலா சென்றுவிட்டு 6 மணிக்கு மேல் தாமதமாக வன சோதனைச்சாவடிக்கு வந்தனர். இதனால் புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா அறிவுறுத்தலின் பேரில் அம்பை வனச்சரகர் கார்த்திகேயன், தாமதமாக வந்த ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 வீதம் 6 பேரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.