குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் குளத்தில் உள்ள ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் நகராட்சி அலுவலகம் அருகே ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் குளம் உள்ளது. இந்த திருப்பாற்கடல் குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. இதனால் குளத்தின் உள்ளே தண்ணீர் எந்த அளவு உள்ளது என்பது தெரியாத நிலை இருந்தது. மேலும் சுகாதார கேடாகவும் இருந்தது. இதையடுத்து ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோரின் ஆலோசனைப்படி குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டதால் பல ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் உள்ள தண்ணீர் தற்போது வெளியே தெரிகிறது. குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.