சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் தூய்மை நகர பட்டியலில் இடம் பெற முடியாமல் திருச்சி மாநகராட்சி தடுமாறி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-09-24 19:29 GMT
திருச்சி, செப்.25&
சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் தூய்மை நகர பட்டியலில் இடம் பெற முடியாமல் திருச்சி மாநகராட்சி தடுமாறி வருகிறது. நோய் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுண்உரம் செயலாக்க மையங்கள்
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ&அபிஷேகபுரம், பொன்மலை என 4 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இந்த 65 வார்டுகளிலும் நாளொன்றுக்கு சுமார் 500 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு அரியமங்கலம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால் அரியமங்கலம் குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உருவானதால் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாநகராட்சியில் உள்ள பல்வேறு வார்டுகளில் 30&க்கும் மேற்பட்ட நுண்உரம் செயலாக்க மையம் கட்டப்பட்டது. இங்கு அந்தந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு செல்லப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. துப்புரவு பணியாளர்கள் வீடுகள், வணிக நிறுவனங்கள் தோறும் சென்று குப்பைகளை சேகரித்து செல்கிறார்கள். இதனால் சாலையோரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன.
புதிதாக உருவான குப்பை மேடு
திருச்சி மாநகராட்சியை தூய்மையான நகரமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குப்பைதொட்டிகள் இல்லாதால் எடமலைப்பட்டிபுதூர், ஒத்தக்கடை, கருமண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. மேலும் குப்பைகளில் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கு சுற்றித்திரியும் கால்நடைகள் தின்பதால் அவை நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது.
அதிலும் குறிப்பாக, திருச்சி வரகனேரி பெரியார்நகர் அருகே உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் குழுமிகரை பகுதியில் இருந்து பிச்சை நகர் நோக்கி செல்லும் சாலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கை போல் புதிதாக குப்பைமேடு உருவாகி வருகிறது. இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டியஅவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் சற்று குறைவான பகுதி என்பதால் அந்த பகுதியில் உருவாகியுள்ள குப்பை மேட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை.
தடுமாறும் மாநகராட்சி
ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு வருடத்துக்கு ரூ.200 கோடி வீதம் 5 வருடங்களுக்கு ரூ.1, 000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த நகரங்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 2015&ம் ஆண்டு தேசிய அளவில் தூய்மை நகரபட்டியலில் திருச்சி மாநகராட்சி 2&ம் இடத்தை பிடித்தது.
தொடர்ந்து 2016&ம் ஆண்டில் 3&வது இடத்தையும், 2017&ம் ஆண்டில் 6&வது இடத்தையும், 2018&ல் 13&வது இடத்தையும், 2019&ல் 39 இடத்தையும் பிடித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர் சரிவை சந்தித்த திருச்சி மாநகராட்சி 2020&ம் ஆண்டு 102 இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு தூய்மை நகர தரவரிசை பட்டியலில் மிகவும் பின்னோக்கி சென்றுவிட்டது. இதனால் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிற தூய்மை நகர விருது பட்டியலில் இடம்பெற முடியாமல் திருச்சி மாநகராட்சி தடுமாறி வருகிறது.
நோய் தொற்று பரவலை தடுக்க கோரிக்கை
இது ஒருபுறம் இருக்க, தற்போது வடகிழக்குப்பருவமழை அடுத்த மாதம் 2&வது வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. பருவமழை காலங்களில் பொதுமக்களை பாதிக்காத வகையில் அனைத்து முன்னேற்பாடுநடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். ஆனால் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஒரு சில வார்டுகளில் தெருக்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரால்கொசுப்புழுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சல் பரவ காரணமாகி வருகிறது. ஆகவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகர பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், நோய்தொற்று பரவலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்