சாத்தனூர் அணையில் ரூ.45 கோடியில் புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி

சாத்தனூர் அணையில் ரூ.45 கோடியில் ஷட்டர்கள் அமைக்கும் பணி நடப்பதால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் தேக்கி வைக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷட்டர்கள் அமைக்கும் பணியை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2021-09-24 18:11 GMT
சாத்தனூர் அணையில் ரூ.45 கோடியில் ஷட்டர்கள் அமைக்கும் பணி நடப்பதால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் தேக்கி வைக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷட்டர்கள் அமைக்கும் பணியை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சாத்தனூர் அணை

தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை அமைந்துள்ளது. 119அடி உயரம் கொண்ட இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 90&க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் தி¢ட்டங்களும் சாத்தனூர் அணையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் இந்த சாத்தனூர் அணை விளங்கி வருகிறது.
சாத்தனூர் அணையில் உள்ள மதகுகளின் ஷட்டர்கள் 63 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். அதன் பின்பு இதுவரை புதிய ஷட்டர்கள் அமைக்கப்படாமல் பழுதுபார்க்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தது. எனவே இந்த ஷட்டர்களை அகற்றிவிட்டு புதிய ஷட்டர்களை அமைத்து சாத்தனூர் அணையின் உட்பகுதியில் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். 

20 பேர் குழு

இதனையடுத்து கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கண்காணிப்பு பொறியாளர் கொண்ட 20 பேர் கொண்ட குழு சாத்தனூர் அணையில் நேரில் ஆய்வு செய்து அணையின் மதகுகளில் உள்ள ஷட்டர்களை புதிதாக அமைக்கவும் அணையின் பூங்காக்களை சீரமைத்து பராமரிக்கவும் ரூ.90 கோடியில் மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பியது. 

அதன்படி நபார்டு வங்கியின் மூலம் முதல்கட்டமாக ரூ.45 கோடி செலவில் சாத்தனூர் அணையில் உள்ள 20 ஷட்டர்களை புதிதாக அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ஷட்டர்களைஅமைக்கும் பணியை திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக தற்போது அணையின் முகப்பில் உள்ள 9 மதகுகளின் ஷட்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு ஷட்டர் அமைப்பதற்கு 15 நாட்கள் தேவைப்படுகிறது. 20 ஷட்டர்கள் அமைப்பதற்கு மொத்தம் 300 நாட்களாகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக இந்த ஆண்டு அணையில் நீரைத் தேக்கி வைக்கவும் திறந்துவிட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆய்வு

சாத்தனூர் அணையில் ஷட்டர்கள் அமைக்கும் பணியை நேற்று முன்தினம் மத்திய நீர் வளம் ஆதார இயக்குனர் ஆனந்த் பிரகாஷ் கண்டியால், துணை இயக்குனர் பிரதாப் குமார் தலைமையில் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் குடியிருப்பு பகுதியில் ரூ.13 கோடியில் நடைபெறும் கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்