ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3ம் கட்ட முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடக்கும் சிறப்பு முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிரிணயிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-09-24 18:11 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடக்கும் சிறப்பு முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிரிணயிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 3&வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. கடந்த இரண்டு முகாம்கள் சிறப்பாக நடந்தது. இந்த முகாம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும்.

வாலாஜா தாலுகாவில் 120 இடங்களிலும், ஆற்காடு தாலுகாவில் 78 இடங்களிலும், அரக்கோணம் தாலுகாவில் 90 இடங்களிலும், நெமிலி தாலுகாவில் 107 இடங்களிலும், கலவை தாலுகாவில் 78 இடங்களிலும், சோளிங்கர் தாலுகாவில் 73 இடங்களிலும் ஆக மொத்தம் 546 இடங்களில் மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தி முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு அதிகப்படியான பொதுமக்களை அழைத்து வர கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
45 ஆயிரம் பேருக்கு

மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 10 லட்சத்து 32 ஆயிரத்து 346 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை முதல் டோஸ் 4 லட்சத்து 68 ஆயிரத்து 276 பேருக்கும், இரண்டாவது டோஸ் 96 ஆயிரத்து 823 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 46 சதவீதம்பேருக்கு இதுவரையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
வரும் வாரங்களில் இதனை அதிகரித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 3&ம் கட்ட சிறப்பு முகாமில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரையில் பொதுமக்களை அழைத்து வர வேண்டும். உடல் பிரச்சனைகள் குறித்து சந்தேகம் உள்ள பொதுமக்கள் தங்கள் உடலை பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்