ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 480 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 480 கர்நாடக மாநில மது பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-24 18:06 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 480 கர்நாடக மாநில மது பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள்

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சிக்குட்பட்ட பூசாரி வட்டம் பகுதியில் ஒரு வீட்டில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு  இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில், போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்து வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு அறையில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் 180 மில்லி கொள்ளளவு கொண்ட மதுபாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

10 பெட்டிகளில் 480 மது பாக்கெட்டுகள் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 என தெரியவந்தது. மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய இருந்த சரவணன் மீது இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். 

கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் பானு என்பவர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்