கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி ஏலம்

கள்ளக்குறிச்சி அருகே 3 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு ஏலம் நடைபெற்றது. இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன்பேரில் ஏலம் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-09-24 17:56 GMT

கள்ளக்குறிச்சி

சிறுவத்தூர் ஊராட்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் சிறுவத்தூர் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் உள்ள 3 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

பாதியில் நிறுத்தம்

இந்த நிலையில் சிறுவத்தூர் ஊராட்சி காலனி பகுதியில் உள்ள 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஏலம் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது வார்டு உறுப்பினர் பதவியை ஏலம் விடுவதற்கு அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஏலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

சிலர் ஏலம் நடைபெற்ற நிகழ்வை செல்போனில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்