குடியாத்தத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் தேர்தல் புறக்கணிப்பு
குடியாத்தத்தில் வங்கியில் கடன் வழங்காததை கண்டித்து மகளிர் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
குடியாத்தம்
குடியாத்தத்தில் வங்கியில் கடன் வழங்காததை கண்டித்து மகளிர் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடன் வழங்கவில்லை
குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி ஊராட்சி கதிர்குளம் கிராமத்தில் சுமார் 7 ஆண்டுகளாக மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் பெறப்படும் பால் ஆவின் நிறுவனத்திற்கு சப்ளை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சங்கத்தை சேர்ந்த 44 மகளிர் உறுப்பினர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் கறவை மாடு வாங்குவதற்கு, மானியத்துடன் கூடிய கடன் வாங்க வங்கி அதிகாரிகளை அணுகி உள்ளனர்.
அப்போது வங்கி கறவை மாடுகள் வாங்க வாங்க கடன் வழங்குவதாகவும், அதற்காக ஒவ்வொருவரும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும், ஒவ்வொரு கணக்கிற்கும் தலா ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாக கட்டுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தலா ரூ.10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் வங்கியில் கடன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
பலமுறை வங்கிக்கு சென்றுகேட்டும், பல்வேறு காரணங்களை கூறி அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து கதிர்குளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பெண்கள் வங்கியின் முன் அமர்ந்து போராட்டம், புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம், சென்னை தலைமை செயலகம் முற்றுகையிட செல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
தேர்தல் புறக்கணிப்பு
இந்த நிலையில் கதிர்குளம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், வங்கிக்கடனுதவி வழங்க கோரியும், வங்கி கடனுதவி வழங்காத வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் புறக்கணிக்க போவதாகவும் கதிர்குளம் மகளிர் பால் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று காலையில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.