விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 23, 850 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு; 150 மனுக்கள் நிராகரிப்பு

விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 24 ஆயிரம் வேட்பு மனுக்களில் 23, 850 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 150 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Update: 2021-09-24 17:16 GMT
விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6&ந் தேதி மற்றும் 9&ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5, 088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6, 097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15&ந் தேதியன்று தொடங்கி 22&ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 241 பேரும், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2, 090 பேரும், 688 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 4, 138 பேரும், 5, 088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17, 531 பேரும் ஆக மொத்தம் 6, 097 பதவியிடங்களுக்கு 24 ஆயிரம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


வேட்பு மனு பரிசீலனை

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி நேற்று முடிவடைந்தது.


இதன் முடிவில் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட 241 வேட்பு மனுக்களில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 239 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 

அதேபோல் 293 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 2, 090 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2, 061 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் 688 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட 4, 138 வேட்பு மனுக்களில் 4, 099 மனுக்கள் ஏற்கப்பட்டு 39 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

 அதுபோல் 5, 088 கிராம ஊராட்சி வார்டுகளில் 17, 531 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 17, 451 மனுக்கள் ஏற்கப்பட்டு 80 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன.

23, 850 பேரின் மனுக்கள் ஏற்பு

மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4 பதவிகளுக்கு 24 ஆயிரம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 23, 850 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன, 150 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். அதன் பிறகு இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


மேலும் செய்திகள்