நெல்லிக்குப்பம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நெல்லிக்குப்பம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.;

Update: 2021-09-24 17:12 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் மகன் விமல்ராஜ் என்கிற சப்பையன் (வயது 25). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 16.6.2019 அன்று அதே பகுதியை சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 15 வயது சிறுமி 8-ம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, அவரது வீட்டுக்குள் சென்றார். பின்னர் கதவை பூட்டி விட்டு, கட்டிலில் படுத்திருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தார். 

இதை வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த சிறுமியின் அக்காள் ஜன்னல் வழியாக பார்த்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் விமல்ராஜ், கத்தியை காட்டி இதை, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இது பற்றி சிறுமியின் தாய் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமல்ராஜை கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் விமல்ராஜ் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.
கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மூலம் ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை 30 நாட்களுக்குள் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி எழிலரசி கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்