முக்கிய இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை

முக்கிய இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை

Update: 2021-09-24 16:10 GMT
முக்கிய இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை

கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதி தீவிரமாக இருந்தது. இதனால் அப்போது தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். 

அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் பயனாக தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பாக மாவட்டம் முழுவதும் வழக்கமான அரசின் கட்டுப்பாடுகளோடு பிரத்யேகமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடந்த வாரம் அத்தியாவசிய கடைகள் இன்றி பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. 

தற்போது அந்த கட்டுப்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் விலக்கிக்கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு தங்கி படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அவ்வாறு கோவை வரும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை கண்காணித்து வருகிறோம். தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். 

இதற்கிடையே கடந்த வாரம் பின்பற்றப்பட்ட கூடுதல் கட்டுப்பாடான ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கிய சாலைகளில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவு வெளியே வருவார்கள். எனவே அங்கு கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக மக்கள் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் மீது அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்