80 ரவுடிகள் சிக்கினர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழிக்குப்பழி சம்பவங்களை தடுக்க குற்றவாளிகள், ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதில் 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 149 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பழிக்குப்பழி சம்பவங்களை தடுக்க குற்றவாளிகள், ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதில் 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 149 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்தரவு
தமிழகத்தில் பழிக்குபழி சம்பவங்கள் நடைபெறுவதை முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுக்கும் வகையில் அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பழிக்குபழி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் கடந்த 2 நாட்களாக பல்வேறு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளவர்கள், சிறையில் இருந்து வெளிவந்தவர்கள், குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்று சந்தேகிப்பவர்கள், குற்ற வரலாற்று பதிவேடு உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி பழிக்குப்பழி சம்பவங்கள் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா, வெடிகுண்டு உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துள்ளனரா என்று சோதனையிட்டனர். இந்த சோதனையில் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், பழிக்குபழி வாங்க காத்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் 80 பேர் சிக்கினர். இவர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் கத்தி, அரிவாள், நீண்ட வாள், இரும்பு கம்பி என 149 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நடவடிக்கை
பிடிபட்ட 149 பேரில் 8 பேர் மட்டும் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்று உறுதியாக சந்தேகிக்கப்படும் வகையில் ஆயுதங்களுடன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 72 பேரிடம் குற்ற செயல்களில் ஈடுமாட்டோம் என்று உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த அதிரடி சோதனை காரணமாக மாவட்டத்தில் ரவுடிகள், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கலக்கமடைந்து அவர்களில் சிலர் வெளிமாவட்டங்களுக்கு தப்பிச்சென்று விட்டனர். அவர்களின் விவரங்களை சேகரித்து தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து மடக்கி பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.