செல்போன் திருடிய இளம்பெண் உள்பட 2 பேர் கைது
செல்போன் திருடிய இளம்பெண் உள்பட 2 பேர் கைது
கோவை
கோவை போத்தனூரை சேர்ந்தவர் மோகன பிரியா (வயது 29). இவர் நவ இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் இவர் டவுன்ஹால் பிரகாசம் பஸ் நிலையத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது இளம்பெண் ஒருவர் அவர் மீது லேசாக இடித்துவிட்டு சென்றார். \
இதனால் சந்தேகமடைந்த மோகனப்பிரியா தனது கைப்பையை சோதனை செய்தார். அப்போது தனது கைப்பையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் அந்த இளம்பெண் வேகமாக அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து மோகனப்பிரியா பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு குழந்தையுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். இதில் மோகன பிரியாவின் செல்போன் அந்த இளம்பெண்ணிடம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஜெமினியாம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி லட்சுமி (25) என்பதும், செல்போன் திருட்டில் ஈடுபட்ட தும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரது குழந்தையை கோவையில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
இதேபோல் கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் கணேஷ்ராம் (33) . இவர் நேற்று முன்தினம் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கணேஷ்ராமின் இருசக்கர வாகனத்தின், பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த செல்போனை திருடிக் கொண்டு ஓடினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேஷ்ராம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் கோவை புல்லுக்காட்டு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஜமீசா (26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.