நகை திருடிய சிறுவன் கைது
ஆசிரியரின் வீட்டில் நகை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் விஜயராஜா (வயது43). விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சொந்த ஊராக கொண்ட இவர் ராமநாதபுரம் அருகே கொள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக கே.கே.நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் விஜயராஜா நள்ளிரவில் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு விஜயராஜாவின் மனைவி எழுந்து பார்த்துள்ளார். பீரோவின் அருகில் ஒரு சிறுவன் உட்கார்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே மர்ம நபர் எழுந்து ஓட முயன்றுள்ளார். விஜயராஜா மடக்கி பிடித்து சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பிடித்து விசாரித்தனர். அந்த நபரை சோதனையிட்டபோது பீரோவில் இருந்து திருடிய தோடுகள், கைசெயின், மோதிரம் என மொத்தம் 4 பவுன்நகைகள், ரொக்கம் ரூ.2 ஆயிரம் இருந்தது. அதனை கைப்பற்றினர். இதனால் ஆத்திரமடைந்து அக்கம்பக்கத்தினர் சிறுவனை தர்ம அடி கொடுத்து அடித்து உதைத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு விஜயராஜா பஜார் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய நகை, பணம் முதலியவற்றை கைப்பற்றி சிறுவனை கைது செய்தனர்.