ஏரல் அருகே 250 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
ஏவல் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய 250 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
ஏரல்:
ஏரல் அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி
ஏரல் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசிகளை வீடு, வீடாக சென்று வாங்கி அதனை வெளி மாநிலங்களுக்கு கடத்திச் செல்வதற்காக சிவகளை பரும்பு பகுதியில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், தனிப்பிரிவு காவலர் கண்ணன், பறக்கும் படை வருவாய் ஆய்வாளர் பி.கருப்பசாமி, பறக்கும் படை துணை தாசில்தார் ஆர்.கருப்பசாமி ஆகியோர் ஏரல் அருகே உள்ள சிவகளை பரும்பு பகுதியில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வனத்துறைக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் தார்ப்பாய் மூடப்பட்டிருந்த நிலையில் இருந்தை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் சுமார் 250&க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அனைத்தும் ரேஷன் அரிசி என தெரியவந்தது. இந்த ரேசன் அரிசி சுமார் 10 டன் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல்
இதுதொடர்பாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தனி தாசில்தார் ஞானராஜ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். தொடர்ந்து அனைத்து ரேஷன் அரிசி மூட்டைகளும் 3 லாரிகள் மூலம் தூத்துக்குடி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கிய மர்ம நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிவகளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.