பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவள்ளூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-09-24 09:23 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் பெரியகாலனி எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 75). விவசாயி ஆவார். இவரது மகன் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட் (30). இந்த நிலையில் சிலம்பரசன் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி வருவாய்த்துறையில் விண்ணப்பித்திருந்தார்.

வெகு நாட்கள் ஆகியும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படாததால் அவர் நேற்று முன்தினம் திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலரும், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான திருமால் (47) என்பவரை அணுகினார். அதற்கு அவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினால் வேலையை முடித்து தருவதாக கூறியுள்ளார்.

இதனால் லஞ்சப் பணம் கொடுக்க விரும்பாத சிலம்பரசன் இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தார்.

இதனை அடுத்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் (பொறுப்பு) தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகிய லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் சிலம்பரசன் அவர்கள் ரசாயனம் தடவி கொடுத்த ரூ.5 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம் நேரில் வழங்கினார்.

அப்போது லஞ்ச பணத்தை பெற்று தனது மேஜைக்கு அடியில் வைக்க முயன்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து செயல்பட்டு கையும், களவுமாக பிடித்து கிராம நிர்வாக அலுவலர் திருமாலை கைது செய்தனர். பின்னர் அவருடன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் திருமாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பாச்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்