கூடலூர்
கூடலூரில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஊருக்குள் வரும் விநாயகன் காட்டு யானையை ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
கன்றுக்குட்டியை கொன்ற புலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா பகுதியில் கடந்த சில மாதங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்பலமூலா அருகே சேமுண்டி பகுதியில் கன்றுக்குட்டியை புலி கடித்துக் கொன்றது. இதனால் அதிச்சி அடைந்த ஊராட்சி மக்கள், இறந்த கன்றுகுட்டியின் உடலை எடுத்துக் கொண்டு கூடலூர் கோட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், மாக்கமூலா, தொரப்பள்ளி ஆகிய இடங்களில் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புலியை பிடிக்க கூண்டு வைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கூண்டு வைப்பு
இதேபோல் விநாயகன் என்ற காட்டு யானை, சில ஆண்டுகளாக ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே காட்டு யானையை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து கூடலூர் முதுமலை எல்லைகளில் 4 கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் கன்றுக்குட்டியை கொன்ற புலியை பிடிப்பதற்காக அம்பலமூலா காபி தோட்டம் பகுதியில் வனத்துறையினர் நள்ளிரவு இரும்புக்கூண்டு வைத்தனர். அதற்குள் புலி கடித்துக் கொன்ற கன்றுக்குட்டியின் உடல் வைக்கப்பட்டது.
மேலும் சேமுண்டி பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தினர். நேற்று காலை கூண்டு வைக்கப்பட்ட இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் கூண்டுக்குள் புலி சிக்கவில்லை என்பது தெரிய வந்தது.
ட்ரோன் மூலம் கண்காணிப்பு
இதையொட்டி மாலை, இரவு நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே தனியாக நடமாடக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர். இதனிடையே கூடலூர் அருகே ஏச்சம்வயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விநாயகன் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.
அது, அங்கிருந்த தென்னை மரத்தை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து யானையை விரட்டி அடித்தனர். இதனால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.
இது குறித்து தகவலறிந்த கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று பகல் 11 மணிக்கு ட்ரோன் பறக்க விட்டு விநாயகன் காட்டு யானை எந்த பகுதியில் உள்ளது என தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால் யானையின் நடமாட்டத்தை அறிய முடியவில்லை. இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் கூடலூருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.