பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் மதம்பிடித்த யானைகளை போல செயல்படுகின்றனர்

பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் மதம்பிடித்த யானைகளாக செயல்பட்டு ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குவதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

Update: 2021-09-23 21:26 GMT
கோப்பு படம்

மும்பை, 
பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் மதம்பிடித்த யானைகளாக செயல்பட்டு ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குவதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
கவர்னருடன் மோதல்
மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கொரோனா பரவலின்போது கோவில்களை திறக்க வேண்டும் என கவர்னர் முதல்&மந்திரிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து முதல்&மந்திரி உத்தவ் தாக்கரே, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே மோதல் வெடித்தது. இதேபோல 12 எம்.எல்.சி.க்கள் நியமன விவகாரம் தொடர்பாகவும் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே உரசல் நீடித்து வருகிறது. 
இந்தநிலையில் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் கடிதத்திற்கும், முதல்&மந்திரி பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் நடந்து வரும் அவலங்கள் குறித்தும், அதுபற்றி ஏன் கவர்னர் கேள்வி எழுப்பவில்லை எனவும் கேட்டு இருந்தார்.
மதம் பிடித்த யானைகள்
இந்தநிலையில் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:&
 பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களின் கவர்னர்கள் மதம் பிடித்த யானைகளை போல உள்ளனர். அவர்களின் பாகன்கள் டெல்லியில் அமர்ந்து உள்ளனர். மேலும் அந்த யானைகள் ஜனநாயக வழிமுறைகள், சட்டம் மற்றும் அரசியல் கலாச்சாரத்தை தங்கள் காலில் போட்டு மிதித்து நசுக்கி புதிய மாதிரியை உருவாக்குகின்றன. பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் அதை கலைக்க வேண்டும் என கவர்னர் அவரது எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும்?. இதுபோன்ற முயற்சிகள் நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும். இது நெருப்புடன் விளையாடுவது போன்றது. இவ்வாறு நெருப்பில் விளையாடும் போது, அது விளையாடும் நபரின் கைகளிலேயே காயத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
ஏஜெண்டுகள்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதால் ஜனநாயகம் நிலைக்கும், மலரும் என யாராவது நினைத்தால், தாங்கள் நசுக்கப்படுவதாக அலறும் மாநில அரசுகளுக்கும் செவி கொடுக்க வேண்டும். மாநில அரசுகள் முறையாக செயல்பட அனுமதிப்பதில்லை. ஒரு கட்சியை (பா.ஜனதா) சேர்ந்த ஏஜெண்டுகள் (கவர்னர்) மட்டும் சுதந்திரமாக செயல்பட்டு மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 மராட்டிய கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பு, சட்டம்&ஒழுங்கு குறித்து கவலைப்படுகிறார். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த கவர்னர்களால் ஏன் எழுப்பப்படவில்லை. இதேபோல இதே பிரச்சினையை பா.ஜனதா ஆட்சியில் அல்லாத அக்கட்சியின் பெண் எம்.எல்.ஏ.க்கள் எழுப்புகின்றனர். ஆனால் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசங்களில் நடைபெறும் இதே பிரச்சினைகளை இந்த எம்.எல்.ஏ.க்கள் எழுப்பவில்லை. அந்த மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி இருப்பதாலும், பா.ஜனதா அல்லாத கட்சி ஆட்சியில் இருப்பதால், அவர்கள் மராட்டியத்தில் இந்த பிரச்சினை குறித்து அதிகம் சத்தம் போடுகிறார்களா?. சாமியாரின் சர்ச்சைக்குரிய மரணம், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. நக்சல்களை ஒடுக்குவது தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா அனைத்து மாநில முதல்&மந்திரிகளுடன் பேசினார். அதேநேரத்தில் பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுக்கு எதிராக அவதூறுகளை பரப்புபவர்களுக்கு நூற்றுக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களை நக்சலுக்கு எதிராக பயன்படுத்துவதே முக்கியம். அதைவிட்டு சிலரை பாதுகாக்க பாதுகாப்பு படை வீரர்களை வீணாக்குகின்றனர். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்