புரசபை வருவாய் துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
சக்லேஷ்புராவில் புரசபை வருவாய் துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹாசன்: சக்லேஷ்புராவில் புரசபை வருவாய் துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா புரசபையில் வருவாய் துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் கோபாலகிருஷ்ணா (வயது 41). இவர் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோபாலகிருஷ்ணா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில் வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது கோபாலகிருஷ்ணா தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கோபாலகிருஷ்ணாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சக்லேஷ்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
வாழ்க்கையில் விரக்தி
பின்னர் போலீசார் தற்கொலை செய்துகொண்ட கோபாலகிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, கோபாலகிருஷ்ணா, கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளது. அதில், வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வதாக எழுதி இருந்தார்.
அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து சக்லேஷ்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.