சிவலிங்கத்துடன் சொப்பு பானையில் தங்க புதையல் கிடைத்ததா?

மதுரை ஐராவதநல்லூர் அருகே சாலை விரிவாக்கம் பணியின் போது சிவலிங்கத்துடன் செப்பு பானையில் தங்க புதையல் கிடைத்ததா என்று விசாரணை நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2021-09-23 20:54 GMT
மதுரை
மதுரை ஐராவதநல்லூர் அருகே சாலை விரிவாக்கம் பணியின் போது சிவலிங்கத்துடன் செப்பு பானையில் தங்க புதையல் கிடைத்ததா என்று விசாரணை நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாலை விரிவாக்க பணி 
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே 60 அடி சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. எனவே அங்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் எந்திரம் மூலம் ஐராவதநல்லூர் இந்திரா காந்தி சிலை அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் உள்ள ரோட்டை தோண்டினார்கள். அப்போது அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள சிவலிங்கம் கற்சிலை கிடைத்தது. பின்னர் அந்த சிவலிங்கம் ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிவலிங்கத்துக்கு மாலை அணிவித்து பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அதை மதுரை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் நடந்தன. 
இந்த நிலையில்  ஐராவதநல்லூர் ரோட்டில் சிவலிங்கம் கிடைத்தபோது அதனுடன் செப்பு பானையில் தங்க காசுகளும் கிடைத்ததாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அதை அறிந்து அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் அது வதந்தி என்பது தெரியவந்தது. 
தங்க புதையல் கிடைத்ததா?
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, அந்த இடம் திருமலைநாயக்க மன்னர் அறக்கட்டளையில் இருந்து கிராம நாட்டாமைக்கு தானமாக வழங்கப்பட்டது. பின்பு புறவழிச்சாலைக்கு அரசால் கையகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த இடத்தை தோண்டும்போது சிவலிங்கத்துக்கு கீழே செப்பு பானை ஒன்று கிடைத்ததாகவும், அதில் தங்க காசுகள் இருந்ததாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அதனை சிலர் அரசுக்கு தெரியாமல் மறைத்து விட்டதாகவும், செல்போனில் போட்டோ எடுத்த போது அதை சிலர் தடுத்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றனர். 
மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி கூறும்போது, ஐராவதநல்லூர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பள்ளம் தோண்டும் போது சிவலிங்கம் கிடைத்தது. அதனை மதுரை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளோம். சிவலிங்கத்துடன் செப்பு பானையில் தங்க காசுகள் எதுவும் கிடைக்கவில்லை. இது வதந்தி என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்