2 நாட்களில் 22 ரவுடிகள் கைது
2 நாட்களில் 22 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்
திருச்சி
திருச்சி மாநகரத்தில் நடந்த சில கொலைகளுக்குப்பிறகு, மாநகரக் காவல் துறையினர் பலர் ரவுடிகளைக் கைது செய்து வருகின்றனர். அவர்களில் சிலர், திருச்சி புறநகர் மாவட்டத்தில் தஞ்சமடைய வாய்ப்பு உள்ளதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 காவல் உட்கோட்டங்களிலும் 2 நாட்கள் தொடர் வேட்டை நடத்தப்பட்டது. அதன்படி, ஜீயபுரம் உட்கோட்டத்தை சேர்ந்த 11 ரவுடிகள், திருவெறும்பூர் உட்கோட்டத்தை சேர்ந்த 4 ரவுடிகள், லால்குடி உட்கோட்டத்தை சேர்ந்த 7 ரவுடிகள் என ஆக மொத்தம் 22 ரவுடிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 குற்றவாளிகள் மீது பிணைய பத்திரம் பெறுவதற்கு ஆவணம் செய்தும், 14 பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 9 சட்ட விரோத சில்லரை மது விற்பனையாளர்களும், 4 கஞ்சா விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 4,697 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலை குற்றத்தில் ஈடுபட்டு தற்போது பிணையில் இருந்து வந்த 82 குற்றவாளிகளை தணிக்கை செய்தும் மற்றும் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டு பிணையில் மற்றும் தண்டனை பெற்ற 69 பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.