கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை
சூரமங்கலம், செப்.24
ரெயிலில் மயக்க மருந்து கொடுத்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக சேலம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
நகைகள் கொள்ளை
கேரள மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. டெல்லியில் வசித்து வரும் இவர், கடந்த 11&ந் தேதி தனது மகள் அஞ்சலியுடன் திருவனந்தபுரத்தில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நிஜாமுதீன்&திருவனந்தபுரம் ரெயிலில் புறப்பட்டு வந்தார். இதேபோல், அதே ரெயிலில் கோவையை சேர்ந்த கவுசல்யா என்பவரும் காயங்குளம் செல்வதற்காக வந்துள்ளார். இதனையடுத்து 12&ந் தேதி காலை திருவனந்தபுரத்திற்கு ரெயில் சென்றபோது, விஜயலட்சுமி, அவரது மகள் அஞ்சலி, கவுசல்யா ஆகிய 3 பேரும் எழுந்திருக்க முடியாமல் மயக்க நிலையில் இருக்கையில் படுத்திருந்தனர்.
அப்போது, திருவனந்தபுரம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவர்கள் 3 பேரையும் எழுப்பி விசாரணை நடத்தினர். அதில், 3 பேரும் கழுத்தில் அணிந்திருந்த 17 பவுன் நகைகள் மற்றும் பேக்கில் இருந்த ரூ.1,600, 3 செல்போன்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
மயக்க மருந்து
அதாவது, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவர்கள் இறங்கி சாப்பாடு, தண்ணீர் பாட்டில் வாங்கியதாகவும், அதன்பிறகு என்ன நடந்தது என்பதே எங்களுக்கு தெரியாது என்று நகைகளை பறிகொடுத்த பெண்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரெயில்களில் மயக்க மருந்து கொடுத்து பயணிகளிடம் நகை கொள்ளையில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் படத்தை 3 பேரிடம் காட்டி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கை எதிரே இருந்த ஒரு நபரின் படம் இருந்தது. அது, உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் அக்சர்பாக்சே என தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
இந்த கொள்ளை சம்பவம் சேலம்& பாலக்காடு ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கடந்த 11&ந் தேதி இரவு நிஜாமுதீன்&திருவனந்தபுரம் ரெயில் சென்றபோது, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும் உத்தரபிரதேச கொள்ளை கும்பல் நடமாட்டம் இருந்ததா? என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பயணி விஜயலட்சுமி, சேலத்தில் இறங்கி உணவு வாங்கியதாக தெரிவித்துள்ளதால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.