மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
ஆத்தூர். செப்.24-
ஆத்தூர் அருகே உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
வாரிய தலைவர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
இவர் தனது பணி காலத்தில் ஏராளமான நிறுவனங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு சலுகைகள் அளித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் வெங்கடாச்சலம் மீதான லஞ்ச புகார்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள வீடு மற்றும் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அம்மம்பாளையம் வீடு
மேலும் அவரது சொந்த ஊரான அம்மம்பாளையம் நடுவீதியில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று மதியம் 2 மணிக்கு சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையில் போலீசார் திடீரென வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் ரகுபதி ஆகியோரும் வந்திருந்தனர். வீட்டில் ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இரவு 8.30 மணி வரை நீடித்தது. சோதனையில் எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.