கீரனூர் அருகே பரிதாபம்: கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, பேத்தி பலி
கீரனூர் அருகே கல்குவாரி குட்டையில் தேங்கிய நின்ற தண்ணீரில் மூழ்கி பாட்டி, பேத்தி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
கீரனூர்:
பாட்டி, பேத்தி சாவு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மரிங்கிப்பட்டியை சேர்ந்தவர் பச்சைக்கண்ணு மனைவி ராணி (வயது 50). இவரது மகள் ராதிகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது மகள் நதிலாஸ்ரீ (7). இவர். அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மரிங்கிப்பட்டி அருகே சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைந்துள்ள கல்குவாரி குட்டையில் நேற்று மாலை ராணியும், நதிலாஸ்ரீயும் குளிக்க சென்றனர்.
குட்டையில் உள்ள பாறையின் மேல் ராணி அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்ற நிதிலாஸ்ரீ எதிர்பாராதவிதமாக குட்டையில் விழுந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ராணி குட்டையில் குதித்து பேத்தியை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியாமல் 2 பேரும் நீரில் மூழ்கினர்.
பாட்டி உடல் மீட்பு
இதையடுத்து அங்கு குளித்து கொண்டிருந்த 2 பேரையும் காணவில்லை என்று அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் குட்டையில் இறங்கி 2 பேரையும் தேடி பார்த்தனர். அதில் சிறுமியை மட்டும் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே குட்டையில் தேடி பார்த்து கொண்டிருந்தவர்கள் ராணியையும் பிணமாக மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். 2 பேரிடம் உடல்களையும் பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்தது.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, பேத்தி ஆகிய 2 பேரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.