பெண் வேட்பாளர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2021-09-23 18:18 GMT
ஆம்பூர்

நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது நாயக்கனேரி ஊராட்சி. இங்கு 2,889 மலைவாழ் மக்கள் வாக்காளர்கள், 551 பொதுப்பிரிவினர் என 3,440 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இது வரை நடைபெற்ற தேர்தல்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்த தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சென்னை ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் உள்பட அனைவரிடமும் தங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் பகுதியில் ஆதிதிராவிடர் தற்போது வரை யாரும் இல்லாத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதி திராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனு வழங்கி உள்ளனர். மேலும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட பெண்ணான இந்துமதி நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதற்கான கூடுதல் ஆவணங்களை வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகு கொண்டு வந்து கொடுக்க வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கக்கூடாது என கோஷங்களை எழுப்பியும், அவர் தங்கள் ஊருக்கு சம்பந்தமில்லாதவர் எனக் கூறியும் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் மற்றும் ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் மலைக் கிராம மக்களிடயே சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கலைந்து சென்றனர். இந்தநிலையில் நேற்று பெரியங்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ள பெண் வேட்பாளர் இந்துமதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்