ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், புன்னம்சத்திரம் பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்
முன்னேற்பாடு பணிகள்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் காலியாக உள்ள சித்தலவாய் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், பிள்ளப்பாளையம் ஊராட்சியில் 8&வது வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் வருகிற 9&ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். மேலும், தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பெட்டிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து பிள்ளபாளையம் ஊராட்சி 8&வது வார்டு தேர்தல் நடக்கும் வாக்குச் சாவடியை நேரில் பார்வையிட்டார். முன்னதாக கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சார்பில் கடைவீதி மற்றும் மேல காரு தெருவில் நடந்து வரும் கழிவுநீர் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டார். ஆய்வின்போது குளித்தலை ஆர்.டி.ஓ. (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வெங்கடேசன், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி ஆகியோர் உடனிருந்தனர்.
க.பரமத்தி
க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் புன்னம் சத்திரம் ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட உள்ள பகுதிகளில் ஒன்றான புன்னம் சத்திரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தினை பார்வையிட்ட கலெக்டர், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
புன்னம்சத்திரம்
மேலும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தினையும் பார்வையிட்டுஆய்வு செய்தார். கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் வாக்குப்பதிவின்போதும், வாக்கு எண்ணிக்கையின்போதும் முறையாக பின்பற்றப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் புன்னம் சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நல மையத்திற்கு சென்றவர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா என்று அங்கிருந்த பெற்றோர்களிடம் கேட்டறிந்தார்.