திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார்.

Update: 2021-09-23 17:51 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் திருவண்ணாமலை நகரமும் ஒன்றாகும். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். 

இது மட்டுமின்றி பல்வேறு பணிகளுக்காக திருவண்ணாமலை நகரத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் வருகை தருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. 

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நேற்று மாலை 7 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் திருவண்ணாமலை தேரடி வீதி, காந்தி சிலை பகுதி, திருவண்ணாலை மத்திய பஸ் நிலையம் எதிரில் உள்ள பகுதிகள் மற்றும் பஸ் நிலையத்திற்குள் திடீரென ஆய்வு செய்தார். 

ஆய்வின் போது பஸ் நிலையத்திற்கு எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

ஹெல்மெட் அணிய வேண்டும்

மேலும் அறிவொளி பூங்கா அருகில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் பார்வையிட்டார். 

அப்போது போக்குவரத்து விதி மீறி சிக்னல் நேரத்தில் வாகன ஓட்டிகள் வெள்ளை கோட்டிற்கு அருகில் நிறுத்தாமல் முந்தியடித்து கொண்டு வந்து போக்குவரத்து இடையூறாக நின்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களில் வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். 

ஆய்வின் போது திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்