அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா பரிசோதனை
ஆண்டிப்பட்டி அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9&ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ&மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,292 பேர் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு படிக்கிற சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவியின் தந்தைக்கு, கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் அந்த மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு வந்தார்.
இதனையடுத்து அந்த மாணவி, ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல் அந்த மாணவியுடன் அதே வகுப்பில் படிக்கிற, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவிக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி 9&ம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் பிளஸ்-2 படிக்கிற 12 மாணவிகள் என ஒருவர் பின் ஒருவராக கண் எரிச்சல், தலைவலியால் அவதிப்பட்டனர்.
பிளஸ்-1 மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் அரசு மேல்நிலைப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாணவிகள், ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பிறகு அனைத்து மாணவிகளும் வீடு திரும்பினர். இதற்கிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரோனா பரிசோதனை முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகே மற்ற மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி தலைமையிலான குழுவினர் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.