கோவை
கோவையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மரம் சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இடி-மின்னலுடன் மழை
கோவையில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். அத்துடன் வெயிலிலிருந்து சமாளிக்க குடை பிடித்தபடி சென்றனர். இந்த நிலையில் காலையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகளவு இருந்தது.
ஆனால் மதியம் 1 மணிக்கு மேல் கருமேகங்கள் திரண்டன. பின்னர் மதியம் 3.30 மணி அளவில் இடி மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது. ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் ஆறுபோன்று ஓடியது.
கோவை காந்திபுரம், உக்கடம், கலெக்டர் அலுவலகம், பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர், அவினாசி சாலை, கணபதி, சரவணம்பட்டி, ரத்தினபுரி, மணியகாரம்பாளையம், சித்ரா விமான நிலையம், சிங்காநல்லூர், காந்திபுரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
திடீரென பெய்த மழையால் சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாகன ஓட்டிகள், சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்று ஒதுங்கி நின்றனர்.
மரம் விழுந்தது
மேலும் இந்த மழை காரணமாக கோவை சித்தாபுதூர் ஆர்.வி.என். லே-அவுட் பகுதியில் மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வாரமாக வெளுத்து வாங்கிய வெயிலுக்கு மத்தியில் பெய்த திடீர் மழையால் கோவை குளிர்ந்தது.