பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி
போடியில் அண்ணன்-தம்பியிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, ரூ.11 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போடி:
போடியில், மூணாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே வசிப்பவர் செல்வம் (வயது 50). விவசாயி. இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
போடி அம்மாகுளம் புரபசர் காலனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வேடமாணிக்கம் (47), தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த கணேசன் (46) ஆகியோர் சிவகங்கையில் செயல்படுகிற தனியார் பங்கு சந்தை நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறினர்.
மேலும் இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு அழைத்து சென்று, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சாகுல் அமீது என்ற நெல்லை நவீன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.
இவர்கள் 3 பேரும் சொன்னதை நம்பி பங்கு சந்தையில் நான் (செல்வம்) ரூ.8 லட்சமும், என்னுடைய தம்பி நல்லதம்பி ரூ.3 லட்சமும் முதலீடு செய்தோம். நாங்கள் முதலீடு செய்த தொகைக்கு வட்டிக்காக வங்கியில் காசோலை கொடுத்தனர். அதில் ஒரு காசோலையை மட்டும் கொடுத்து பணம் எடுத்தோம்.
அதன்பிறகு வழங்கிய காசோலை பணம் இன்றி திரும்பி வந்து விட்டது. இது தொடர்பாக கேட்டபோது அவர்கள் சரிவர பதில் கூறவில்லை. மேலும் அவர்கள் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.
அப்போது தான் சாகுல் அமீது, கணேசன், வேடமாணிக்கம் ஆகியோர் எங்களிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பங்குசந்தையில் முதலீடு செய்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போடி நகர் போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் புகார் கூறப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.