நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?

வீதிகளிலேயே குவித்து வைக்கும் அவலநிலை ஏற்பட்டிருப்பதால், அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-09-23 17:24 GMT
தேவதானப்பட்டி:

வீதியில் குவித்து வைக்கும் அவலம்

தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, காமக்காபட்டி பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.

இதுதொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். இருப்பினும், கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் அறுவடை செய்த நெல்லை, கடந்த ஆண்டு கொள்முதல் நிலையம் செயல்பட்ட வளாகத்திலேயே திறந்த வெளியில் விவசாயிகள் குவித்து வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது பெய்து வரும் மழையால், நெல் முளைத்து வீணாகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள்

இதேபோல் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டு முதல் போக பாசனத்துக்காக, கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அங்கு பயிரிட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

இதனையடுத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், உடனடியாக பணப்பட்டுவாடா செய்யவும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் முதல்போக நெல் அறுவடை தொடங்க உள்ளது. ஆனால் இதுவரை அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கடந்த காலங்களில் அறுவடை முடியும் தருவாயில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அதுவும் விளைநிலங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பயன் அடையவில்லை. குறிப்பாக இடைத்தரகர்கள் மட்டுமே பயன் அடைந்தனர். 

தற்போது முதல் போக சாகுபடி அறுவடை தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை விரைவில் அமைக்க வேண்டும். மேலும் விளை நிலங்களுக்கு அருகிலேயே நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் போது விவசாயிகளுக்கு வாகன போக்குவரத்து செலவு, நேரம் விரயம் தவிர்க்கப்படும் என்றனர்.

எனவே கம்பம், தேவதானப்பட்டி பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்