நர்சை கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய வங்கி ஊழியர் கைது
திருமணம் செய்வதாக கூறி நர்சை கர்ப்பிணியாக்கி ஏமாற்றிய வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 23). இவர், தேனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இவர், 22 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி அவரிடம் பழகி வந்தார்.
அந்த பெண், ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த மே மாதம் அந்த பெண்ணை முத்துக்குமார் தேனியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அறை எடுத்து தங்கி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் உல்லாசமாக இருந்தார்.
இந்நிலையில் அந்த பெண், தேனியில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண், முத்துக்குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.
ஆனால், அவர் திருமணம் செய்ய மறுத்தார். மேலும், முத்துக்குமாரும், அவருடைய தந்தை பாஸ்கரனும் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முத்துக்குமார், பாஸ்கரன் ஆகிய 2 பேர் மீதும் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், முத்துக்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.